Tuesday, March 1, 2016

God... These Chennai Auto Drivers - Their Character - Blog In Tamil

The same story in The Hindu: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/auto-service/article8375553.ece 

மனித நேயத்தின் மற்றொரு பெயர் ஆட்டோ ரவி... 

ரவி என்கின்ற ரவிச்சந்திரன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார்.பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார். 

சென்னைக் வரும் பல்வேறு மாநில பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம் இந்தி கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர். சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். 

அப்படி அவர் செய்த காரியம் என்ன? 

கோல்கத்தாவை சேர்ந்தவர் சங்கரதாஸ்(52)தன் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவர் சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார். 

சங்கரதாஸ்க்கு தமிழ் தெரியாது, இந்தியில் தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது, கண் இருண்டது, வேர்த்து கொட்டியது, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார். 

வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கே சங்கரதாசை பரிசோதித்த டாக்டர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச்சொன்னார். 

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பிவைத்தனர். 

ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் சென்றார், வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டார்,ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக்கொண்டார். 

ஆஸ்பத்திரியில் சங்கரதாசை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்கமுடியாது, ஆனாலும் இவரது உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது,உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்த கருவி வெளியில்தான் வாங்கவேண்டும் அதுவும் உடனே வாங்கவேண்டும் இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது என்றனர். 

சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கோல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று. 

ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார் நண்பர் ஒருவரிடம் நிலமையை சொல்லி 27 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார் 57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர் இந்தாங்க என்னால புரட்ட முடிந்ததுன்னு 57 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். 

ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?என டாக்டர்கள் கேட்க, இவரு யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான், என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர். 

இதற்குள் பத்து நாட்களாகிவிட்டது இந்த பத்து நாட்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச் செல்வது மருத்துவபரிசோனைகளுக்கு உட்படுத்துவது படுக்கவைப்பது சாப்பிடவைப்பது நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என பார்த்துக்கொண்டார். 

பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொள்வார் இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டு செலவிற்கு கொடுத்துவிடுவார் காலையில் வீட்டில் பால் போட்டு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வந்துவிடுவார்.தாளிக்காத உணவு கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒட்டல் ஒட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார். 

இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாக பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார் காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார். 

பிறகு நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும் போது சங்கரதாஸ் பேசவே இல்லை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதார் அங்கே மொழிக்கு வழியேயில்லை அன்புதான் மேலோங்கியிருந்தது. கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனது ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ரவியை எங்கேப்பா இருபது நாளாக்காணோம் என்று அவரது நண்பர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு அதான் வரமுடியலை என்று சொல்லியிருக்கிறார். 

என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே இது நாலு பேருக்கு தெரியட்டும் என்றபடி தனக்கு தெரிந்த ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார். 

இதன் மூலம் இவரை தொடர்புகொண்ட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார்.இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர அதெல்லாம் வேண்டாம் நான் மனிதனாக என் கடமையை செய்தேன் அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றபடி அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று ஆட்டோவை செலுத்துகிறார். மனிதநேயத்தின் மறு உருவமாக திகழும் ரவியிடம் பேசுவதற்கான எண்:9884809444. 

-எல்.முருகராஜ் murugaraj@dinamalar.in

No comments:

Post a Comment

Popular Posts

Annual Performance Review

  A Better Way to Evaluate Employees